1995-96ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலே கல்வித் துறைக்கு செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 2,233 கோடி ரூபாய். 2000-2001ஆம் ஆண்டிற்கு கல்வித்துறைக்காக செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 4,949 கோடி ரூபாய். அதாவது 2,716 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கல்வித் துறைக்காகச் செய்யப்பட்டுள்ளது. 95-96 இல் ஒதுக்கப்பட்ட நிதியைப் போல மேலும் கூடுதலாக ஒரு மடங்கு நிதி இந்தத் துறையின் முக்கியத்துவத்தைக் கருதி ஒதுக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஐந்தாண்டு காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 531. தற்போதைய கழக ஆட்சியில் நான்கரை ஆண்டுக் காலத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 965.
512 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்டன. 380 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்தப்பட்டன.
303 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக ஆக்கப்பட்டன.
எங்கள் 1996-2001 ஆட்சியிலே 41,887 இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமைப்படி நியமிக்கப்பட்டார்கள்.
எங்கள் 1996-2001 ஆட்சியிலே 2,916 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 4,046 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிலே அமர்த்தப்பட்டார்கள்.
மாவட்ட ஆசிரியர் கல்விப் பயிற்சி நிறுவனங்களிலே 238 ஆசிரியர்கள் 1996-2001 ஆட்சியிலே அமர்த்தப்பட்டார்கள்.
பத்தாம் வகுப்புத் தேர்விலும் 12ஆம் வகுப்புத் தேர்விலும் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களது உயர் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்வதென்று முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே 1996 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களில் இருந்து ஒவ்வொரு வகைத் தொழில் கல்விப் பிரிவுகளிலும் சேரும் முதல் பத்து நிலை மாணவர்களின் கல்விச் செலவை 1996-97 முதல் அரசே ஏற்றுக் கொள்கிறது.
கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற் கல்விப் பிரிவுகளிலும் 15 விழுக்காடு இடஒதுக்கீடு திட்டம் 1997-98ஆம் ஆண்டு முதல் நடைமுறைப் படுத்தப்படுகிறது. இதன் மூலம் 97-98இல் 864 மாணவர்களும், 98-99இல் 1190 மாணவர்களும், 99-2000இல் 1544 மாணவர்களும் பயன் பெற்றனர்.
1999-2000ஆம் ஆண்டு முதல் 666 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்புகளில் 112 கோடி ரூபாய் செலவிலும், 2000-2001ஆம் ஆண்டு முதல் எஞ்சிய 516 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 75.66 கோடி ரூபாய் செலவிலும், 16 சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 192 இலட்சம் ரூபாய் செலவிலும், 12 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 279 இலட்சம் ரூபாய் செலவிலும், 5 அரசு சட்டக் கல்லூரிகளில் 155 இலட்சம் ரூபாய் செலவிலும்,, 60 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 28.22 கோடி ரூபாய் செலவிலும் கணினிப் பாடம் கற்பிக்கப்படுகிறது.
தீவிர தொடக்கக் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக 1999-2000ஆம் ஆண்டில் 6 முதல் 14 வயது வரையுள்ள 27,000 குழந்தைகள் முந்தைய ஆண்டு சேர்க்கையை விட கூடுதலாகப் பள்ளிகளிலே சேர்க்கப்பட்டனர்.
1998-99ஆம் ஆண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் பாடநூல்கள் வழங்கப்பட்ட வகையில் பயன்பெற்ற மாணவர்கள் 59.13 இலட்சம். இதற்காக அரசு வழங்கிய தொகை 25.31 கோடி ரூபாயாகும்.

